×

விவசாயிகளும் லட்சம் ரூபாய் சம்பாதிக்க வழிவகை செய்யப்படும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உறுதி

ெநல்லை, மார்ச் 31: விவசாயிகளும் மாதம் லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என்று, நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உறுதி அளித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வரமங்கை புரம், மேல அரியகுளம், உண்ணங்குளம், இளையார்குளம், கல்வெட்டான்குழி, புத்தனேரி, சிங்கனேரி, விஜயநாராயணம், சங்கணான்குளம், மன்னார்புரம், ராஜகோபாலபுரம், களக்காடு, மேலபத்தை, வடமலைசமுத்திரம், தம்பிதோப்பு, சிங்கம்பத்து, நாகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் உங்களைப் பார்க்கிறேன். உங்களோடு பழகுகிறேன். உங்களுக்கு என்ன தேவை? உங்கள் ஊருக்கு என்ன தேவை? என்பதையெல்லாம் நன்கு அறிவேன்.

நம்முடைய வெற்றி உறுதியாகி விட்டது. என் அன்புக்குரிய நாங்குநேரி மக்களுக்கு புது விடியல் பிறக்கப் போகிறது. நம் தொகுதியில், நாம் அனைவரும் இணைந்து பசுமை புரட்சியை உருவாக்குவோம். நம்முடைய தொகுதியில் முக்கியத் தொழில், விவசாயம் தான். ஆனால், உங்களில் எத்தனை பேர் விவசாயம் செய்கிறீர்கள்? எல்லோரும் முப்போகம் விவசாயம் செய்த வேளாண் பூமி, நம் நாங்குநேரி பகுதி. இன்று, ஒருபுறம் விவசாயம் என்றால், மறுபுறம் கடும் வறட்சி நிலவுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கின்றன.
நம் நாங்குநேரி பகுதி முழுவதும் விவசாயம் செழிப்படைய முதல் தேவை தண்ணீர். மழைக்காலங்களில் நம் பகுதியில் ஓடும் தாமிரபரணி, மணிமுத்தாற்றில் வெள்ளம் வருகிறது. அந்தத் தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் தாமிரபரணி, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை 2012ம் ஆண்டிலேயே முடித்து இருந்தால், இங்கே கடும் வறட்சி என்பதற்கு இடம் இல்லாமல் போய் இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு, ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டு இருக்கிறது மக்கள் விரோத அதிமுக அரசு. இவர்களுக்கு மக்கள் மேல் துளியும் அக்கறை கிடையாது. நாம் ஒவ்வொருவரும் விவசாயம் செய்ய வேண்டும். எல்லோரும் முதலாளிகள் ஆக வேண்டும். நீங்கள் வேலை தேடிய காலம் இனி வரவேண்டாம். நாம், பத்து பேருக்கு வேலை கொடுப்போம். நான் வெற்றிபெற்றால், தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை ஓராண்டுக்குள் செயல்படுத்தி முடிப்பேன். ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி, அதில் மழைநீரை சேமித்து, நீங்கள் எல்லோரும் விவசாயம் செய்ய நிறைவாக தண்ணீர் தருகிறேன்.

விவசாயம் செய்யும் ஒவ்வொருவரும், மாதம் குறைந்தது லட்சம் ரூபாய்க்குமேல் வருமானம் பெற முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவோம். உங்கள் வீட்டுக்கு சுகாதாரமான குடிநீரும், விவசாயத்துக்கு ஆண்டு முழுவதும் தண்ணீரும் கிடைக்க, வரும் ஏப்ரல் 6ம் தேதி நீங்கள் கை சின்னத்தில் வாக்களியுங்கள். கை சின்னத்திற்கு வாக்களித்து, நம் தொகுதி வளம்பெற என்னை ஆதரியுங்கள்’’ என்றார். பிரசாரத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ்  தலைவர்  தமிழ்செல்வன், வட்டார தலைவர் தனபால், ஜார்ஜ் வில்சன், முன்னாள்  எம்.எல்.ஏ  கிருஷ்ணன், நகர திமுக செயலாளர் சிவசங்கரன், காங்கிரஸ் வட்டாரத்  தலைவர் வாகை துரை, செல்லப்பாண்டியன், தாழைகுளம்  ராஜன், பாணான்குளம்  பொன்ராஜ், சங்கர்நகர் ராமநாதன், வானமாமலை,  திமுக நிர்வாகிகள்  சங்கரபாண்டியன், வானமாமலை மதிமுக சட்டத்துறை மாநில துணைச்செயலாளர்  சுதர்சன், தம்புபுரம் வானமாமலை மற்றும் கூட்டணி கட்சியினர் உடன்  சென்றனர்.

Tags : Congress ,Ruby Manokaran ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...