சுற்றுலா தலமான லாடபுரம் மயிலூற்றுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும்: திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்குறுதி

பெரம்பலூர்,மார்ச் 31: பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டியிடுகிறார். பெரம்பலூர் ஒன்றியம், புதுநடுவலூர் மற்றும் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, புதூர் ஆகிய இடங்களில் நேற்று தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் பிரபாகரன் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் தான் பெரம்பலூர் கல்வியில் தன்னிகரில்லா வளர்ச்சியை பெற்றது. கீழக்கணவாயில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும், பெரம்பலூரில் அரசு ஐடிஐ ஆகியவை கொண்டுவரப்பட்டது.

ஒதியத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். சுற்றுலாத் தலமான லாடபுரம் மயிலூற்றுக்கு தரமான சாலை வசதி, பஸ்வசதி செய்து தரப்படும் என்றார். வாக்குகள் சேகரிப்பின் போது திமுக பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் டாக்டர் வல்லபன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, குரும்பலூர் பேரூர் செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: