கொரோனா தடுப்பு பணிக்கு 4902 வாக்குச்சாவடிகளில் 9804 தன்னார்வலர்கள் நியமனம்

திருவள்ளூர், மார்ச் 31: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 4902 வாக்குச்சாவடிகளில் தலா 2 பேர் வீதம் 9804 தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பொன்னையா தெரிவித்தார். திருவள்ளுர் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கேற்ப வாக்குப்பதிவு தினநாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக நியமனம் செய்யப்பட்ட இரண்டு தன்னார்வலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பொன்னையா தலைமை வகித்து பேசியதாவது, “திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 4902  வாக்குச்சாவடிகளில் தலா 2 பேர் வீதம் 9804 தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு  பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கோவிட் பாதுகாப்பு தொடர்பான 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சவடி அலுவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய இரண்டு பெட்டககங்கள் (சிறியது மற்றும் பெரியது) வழங்கப்படும். அதில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான கிருமிநாசினி, கையுறைகள், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட உபகரணங்கள் இருக்கும். வாக்குச்சாவடிகளில் நியமித்த தன்னார்வலர்களில் ஒருவர் வாக்குச்சாவடிகளில் நுழையும் அனைத்து வாக்காளர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலையை ஆய்வு செய்து சராசரி வெப்பநிலையில் உள்ள வாக்காளர்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். இறுதியாக வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவுற்ற பிறகு மேற்குறிப்பிட்டவாறு வாக்காளர்களால் பயன்படுத்தப்பட்டு மருத்துவ கழிவு பெட்டியில் போடப்பட்ட கையுறை, முககவசம் உள்ளிட்டபொருள்களை ஜிப் பேக்கால் இறுக்கமாக கட்டப்பட்டு பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனத்தில் தொடர்புடைய பணியாளரிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும். மேலும், பயன்படுத்தாத பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை தனித்தனியாக சிறிய மற்றும் பெரிய பெட்டகத்தில் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

பின்னர் இது தொடர்பாக கணிப்பொறி அகன்ற திரையில் தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு படம் காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜவஹர்லால் (திருவள்ளுர்), பிரபாகரன்(பூந்தமல்லி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான செந்தில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More