உயர் கோபுர விளக்கு, வேகத்தடை இல்லாததால் வையாவூர் சாலை காமாட்சி நகரில் அடிக்கடி விபத்து

வாலாஜாபாத், மார்ச் 31: காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர்  செல்லும் சாலை காமாட்சி நகரில், உயர் கோபுர விளக்கு மற்றும் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் செல்லும் சாலையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் 100க்கும் மேற்பட்டோர் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையில் லாரி, கார், பஸ், பைக் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில்,  வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி நகரில், களியனூர் சாலை இணைப்பு சாலையாக உள்ளது.  இங்குள்ள சாலைகள் 3 திசைகளாக காணப்படுகிறது.  இதனால் இருபுறமும் வரும் வாகனங்கள் எதிர்ப்புறம் வரும் வாகனங்களுக்கு தெரியாத வண்ணம் உள்ளன.  இதையொட்டி, இப்பகுதியில் தினமும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் செல்லும் சாலை கலியனூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலை ஆகிய 2 சாலைகளையும் இணைக்கும் பகுதியாக காமாட்சி நகர் அமைந்துள்ளது.  இந்த சாலைகளில் எவ்வித வேகதடைகளும் இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த மும்முனை பகுதிகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.  மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் உயர் கோபுர விளக்கு பொருத்தினால் இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கலாம் என பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இரவு நேரங்களில், மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால், வாகன விபத்தில் சிக்குபவர்களை மீட்பதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற விபத்துக்களில் பலர் கை, கால்கள் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சில உயிர் பலிகளும் நடந்துள்ளன. இதனை தடுக்க மேற்கண்ட சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதற்கு, நெடுஞ்சாலை துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More
>