×

திருப்போரூரில் இருந்து 3 கிமீ நடந்து செல்லும் மாணவர்கள் நெம்மேலி அரசு கல்லூரி வழியாக மினி பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மார்ச் 31:  திருப்போரூரில் இருந்து நெம்மேலியில் உள்ள  சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிக்கு 3 கிமீ தூரம் நடந்து செல்கின்றனர். இதனால், கல்லூரிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி உள்ளது. சமீபத்தில் இக்கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பிஏ, பி.காம், பி.காம் கார்ப்பரேட், பிசிஏ ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த கல்லூரியில் 260 மாணவர்கள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகின்றனர். மொத்தமுள்ள 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து 700க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கின்றனர். திருப்போரூர், இள்ளலூர், வெண்பேடு, காயார், செம்பாக்கம், மடையத்தூர், கரும்பாக்கம், மயிலை, கொட்டமேடு, தண்டலம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வரை பஸ்களில் வரும் மாணவ, மாணவிகள். திருப்போரூரில் இருந்து கல்லூரி அமைந்துள்ள நெம்மேலி வரை 3 கிமீ தூரம் நடந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் பஸ்கள் இல்லாததால், அவர்கள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுபோல் மாணவிகள் தனியாக நெம்மேலி சாலையில் நடந்து செல்லும்போது, அவ்வழியே அவர்களை பின்தொடர்ந்து வாலிபர்கள் பைக்கில் வேகமாக சென்று மோதுவதுபோல் பயமுறுத்துகின்றனர். இதனால் அவர்கள் அலறி சத்தமிட்டு பயந்து ஓடுகின்றனர். எனவே, திருப்போரூரில் இருந்து நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, திருவிடந்தை, செம்மஞ்சேரி வழியாக கோவளம் வரை மினி பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மினி பஸ் இயக்கினால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்று திரும்ப முடியும். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராம மக்கள் திருப்போரூரில் உள்ள சார்பதிவகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின் வாரிய அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு எளிய முறையில் வந்து செல்ல முடியும் என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர்கள், தங்களது மீன் வியாபாரத்துக்கு திருப்போரூர் சந்தையை நம்பி உள்ளனர். இந்த சாலையில் பஸ் போக்குவரத்து ஏற்படுத்தினால் அவர்களும் தங்களின் மீன் விற்பனைக்கு இந்த வசதியை பயன்படுத்த இயலும் என்பதால் திருப்போரூர் & கோவளம் இடையே நெம்மேலி வழியாக மினி பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.



Tags : Thiruporur ,Nemmely Government College ,
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...