உத்திரமேரூர். திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு

திருப்போரூர், மார்ச் 31: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில்  வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவுபெற்றன. திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று  தொடங்கியது. இதையடுத்து காலை 8 மணிக்கு தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். மேலும், 11 வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களது முகவர்களும் வந்திருனர். இதையடுத்து, திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட 417 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல், அனைத்து கட்சியினரின் முன்னிலையில், தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் ரஞ்சனி ஆகியோர், அனைவரது முன்னிலையில் திறந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியே எடுத்தனர். பின்னர், 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தலா மண்டலத்துக்கு 18 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்தந்த மையங்களின் தேர்தல் அலுவலர்கள் மூலம், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்துவது குறித்து திமுக, விசிக வேட்பாளருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த திமுகவினர் தேர்தல் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தேர்தல் அலுவலர்,  வேட்பாளரை தொடர்பு கொண்டதாகவும், அவருடைய தொடர்பு கிடைக்காததால் அவரது வழக்கறிஞரிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.

ஆனால், அதுபோல் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை, தேர்தல் அலுவலர் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என திமுகவினர் குற்றஞ்சாட்டினர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் தொகுதியில் 20 பேர் போட்டியிடுகின்றனர். நோட்டாவுடன் சேர்த்து 21 இலக்குகள் கொண்ட 2 வாக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இதில் மொத்தம் 359 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலர் பாபு, உதவி தேர்தல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Related Stories:

>