தாமிரபரணி திட்டத்தில் குழாய் பதித்ததும் அருப்புக்கோட்டை நகருக்கு கூடுதலாக 1 கோடி லிட்டர் தண்ணீர் திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் வாக்குறுதி

அருப்புக்கோட்டை, மார்ச் 31: அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நேற்று அருப்புக்ேகாட்டை நகரில் சிவன் கோயில், நேரு மைதானம், தட்சிணாமூர்த்தி கோயில், கைலாச ஊரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘என்னை உங்கள் வீட்டு பிள்ளைகள் அப்பா, தாத்தா என்று உறவு முறையோடு அழைப்பர். இதைவிட எனக்கு என்ன சொந்தம் வேணும். 45 வருடமாக என்ன செய்தார் என்று என்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் கேட்கிறார். அவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நான் என்ன செய்தேன் என்பது பொதுமக்களுக்கு தெரியும். எனக்கு தொடர்ந்து ஓட்டு போடுகிறீர்கள் என்றால் நான் நல்லது செய்ததால் தான். கொரோனா காலத்தில் இந்த அதிமுக வேட்பாளர் எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த ஊரின் வளர்ச்சியில் என்னுடைய பங்கு முழுமையாக உள்ளது. திரிசுற்றும் தொழில், விசைத்தறி தொழில் செய்ய பாதுகாப்பாக இருந்துள்ளேன். ரூ.240 கோடி செலவிலான புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் தேர்தல் முடிந்தவுடன் பகிர்மான குழாய் பதிக்கும் பணி துவங்கும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச்சாலை அமைக்கப்படும்’ என்றார். பிரசாரத்தில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகர செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் தமிழ்காந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: