×

அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி: இ.கருணாநிதி உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று திருநீர்மலை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் சாலை, மழைநீர் கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட மழை மற்றும் புயல் காலங்களில் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து நான் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சூழ்ந்திருந்த மழை நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்தேன். கொரோனா காலத்தில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத சூழ்நிலையில், நான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தேன். எனது சொந்த செலவில், லாரிகள் மூலம் ஒவ்வொரு தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தினேன்.

அதுபோல பொதுமக்களுக்காக பல்வேறு பணிகளை செய்திடவும், கொரோனா நிவாரணமாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 4000த்தை பெற்றுத்தர, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தின் போது, புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திரன், திருநீர்மலை பேரூர் கழக பொறுப்பாளர் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...