×

சிவகங்கை மாவட்டத்தில் அச்சுறுத்தும் இரட்டைக் கொலைகள் பொதுமக்கள் பீதி

சிவகங்கை, மார்ச் 31: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் இரட்டை கொலைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய ஐந்து போலீஸ் சப் டிவிசன்கள் உள்ளன. இதில் சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப்டிவிசன்களே அதிக குற்றச்சம்பவங்கள் பதிவாகும் இடங்களாகும். மாவட்டத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன் 5 உட்பட மொத்தம் 49 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. 2015ம் ஆண்டில் 35 கொலைகள், 2016ம் ஆண்டில் 32 கொலைகள், 2017ம் ஆண்டில் 33 கொலைகள், 2018ம் ஆண்டில் 33 கொலைகள், 2019ம் ஆண்டில் 44 கொலைகள் நடந்துள்ளன. 2020ம் ஆண்டு 21 கொலைகள் நடந்துள்ளன. மாவட்டத்தில் இரட்டை கொலைகள் நடந்து வருவது அதிகரித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிப்.13ல் மதகுபட்டி அருகே பொன்குண்டுப்பட்டியில் வீரையா(56), அவருடைய இரண்டாவது மனைவி ஜோதிமணி(45) ஆகிய இருவரும் வீட்டிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்தது. மார்ச் 6ல் சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் அதிமுக பிரமுகர் நாகராஜன்(50), அவரது மகன் விக்னேஷ்(22) இருவரையும் ஒன்பது பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது. அரசியல் உட் கட்சி விரோதத்தால் இந்த கொலைகள் நடந்தன. ஏப்.15ல் இளையான்குடி அருகே வடக்கு அண்டக்குடியில் அங்காளஈஸ்வரி(65), இவரது மகன் சீனிவாசன்(42) ஆகிய இருவரும் சொத்து தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை 14ல் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில் ராணுவவீரரின் தாய் ராஜகுமாரி(60), மனைவி சினேகா(30) ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டு இவர்களது வீட்டில் இருந்த 75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகங்கை அருகே அழுபிள்ளைதாங்கி கிராமத்தில் முன் விரோதத்தில் ஆடு மேய்த்துகொண்டிருந்த கருப்பையா(60), இவருடைய மகன் சாமிநாதன்(35) இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக சொத்து தகராறில் குடும்பத்திற்குள் அல்லது உறவினர்களுக்குள் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் நடந்ததில் சில கொலைகள் மட்டுமே திட்டமிடப்பட்ட கொலைகள் ஆகும். அதிகப்படியான கொலைகள் எதிர்பாராத விதமாக நடந்தது. பொதுவாக இம்மாவட்டத்தில் சொத்து தகராறு, உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் உள்ளிட்டவைகளிலேயே அதிகமான கொலைகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட கொலை, ஆதாயக்கொலை, காதல் மற்றும் பெண் விவகாரத்தில் கொலை சம்பவங்கள் சில மட்டுமே நடந்துள்ளன. 95 சதவீத கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

Tags : Sivagangai district ,
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து