திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கு தபால் ஓட்டு முகாம்

பழநி /திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நடந்த காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கான தபால் ஓட்டு முகாமில் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப். 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் அவர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு நேற்று தபால் வாக்களிக்கும் முகாம் அந்தந்த தொகுதிகளில் நடந்தது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் 830 பேர் தபால் வாக்கு செலுத்த சீலப்பாடி ஆயுதப்படை மைதான கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. காவலர்கள், ஊர்க்காவல் படையினர் தங்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்ப்பித்த பின்னர் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் தங்களது வாக்கினை செலுத்திய பின் மூடி சீல் வைத்த கவரை வாக்கு பெட்டியில் போட்டனர்.

பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் பழநி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 211 காவலர்கள்,  86 ஊர்க்காவல்படையினர் என 297 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீசார்,  ஊர்க்காவல்படையினர் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் போலீசார், ஊர்க்காவல் படையினர் தங்களது வாக்கினை தபால் மூலம் செலுத்தினர். மேலும் பழநி யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் சின்னம்,  பெயர் பொறிக்கப்பட்ட காகிதம் பொருத்தும் பணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. 485 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 547 விவிபேட் இயந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. இப்பணிகளை பழநி கோட்டாட்சியர் ஆனந்தி, தாசில்தார் வடிவேல் முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுபோல் திண்டுக்கல் உள்ளிட்ட 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.

Related Stories:

>