×

பழநி தொகுதி அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டம்

பழநி, மார்ச் 31: பழநி அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் அக்கட்சியினர் வாக்குசேகரிப்பில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ குப்புச்சாமியின் மகன் ரவிமனோகரன் போட்டியிடுகிறார். கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்லாதது, கட்சியினர் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தாதது போன்றவை இவருக்கு எதிரான அலைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது வரை அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் பழநி நகர்,  ஒன்றிய பகுதிகளில் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலை தீர்க்க முடியாமல் வேட்பாளர் தரப்பினர் திணறி வருகின்றனர்.

பழநி அருகே பாலசமுத்திரத்தில் அதிமுக பேரூர் செயலாளராக சக்திவேல் உள்ளார். புதிதாக பொறுப்பு பெற்ற சக்திவேலிற்கும் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லையென கூறப்படுகிறது. பாலசமுத்திரம் பேரூராட்சியில் வாக்கு சேகரிப்பிற்கு சென்ற அதிமுகவினருக்கும், பேரூர் செயலாளருக்குமிடையே பொதுவெளியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குசேகரிப்பு தொடர்பாக முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லையென பேரூர் செயலாளர் தரப்பினர் கேட்க, அதற்கு கட்சி நிர்வாகிகள் வேறு கருத்துக்கள் கூற அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அங்குள்ள சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்,  பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அதிமுக நிர்வாகிகளிடையே இருந்த மனக்கசப்பு மற்றும் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கட்சியினரின் இந்நடவடிக்கையால் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் செய்வதறியாது திகைத்து போய் உள்ளார். கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்லாததால் அதிமுக வேட்பாளரின் வெற்றியில பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Palani constituency ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு