×

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகன வசதி இல்லாத 4 ஊர்களுக்கு முன்னரே செல்லும் ஓட்டு மிஷின்

பழநி, மார்ச் 31: கொடைக்கானல் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத 4 ஊர்களுக்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களும், தேர்தல் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்படுவர். திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பழநி சட்டமன்ற தொகுதியில் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. இவ்வூர்களுக்கு சுமார் 5ல் இருந்து 7 மணிநேரம் வரை நடந்துதான் செல்ல முடியும். அந்த ஊர்களுக்கு தலைச்சுமையாகவும், கழுதை மற்றும் குதிரைகள் மூலமாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன்படி கொடைக்கானல் மலைப்பகுதியில் நடந்து செல்லும் வகையில் உள்ள 4 ஊர்களுக்கு ஏப்.4ம் தேதியே வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சின்னூர், பெரியூர், வெள்ளகவி, மஞ்சம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். எனவே, இக்கிராமங்களுக்கான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏப்.5ம் தேதிக்கு பதிலாக ஏப்.4ம் தேதியே அனுப்பி வைக்கப்படும். இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.

Tags : Kodaikanal hills ,
× RELATED மலைக்கிராமங்களுக்கு குதிரை,...