×

அதிமுகவிற்கு ஓட்டுப்போடவில்லை என்பதற்காக குமரியை புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?

நாகர்கோவில், மார்ச் 31:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். குமரி மாவட்டத்தில் 2வது கட்டமாக நேற்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தவர் அங்கிருந்து கார் மூலமாக ஆரல்வாய்மொழிக்கு வந்தார். அங்கு எம்ஜிஆர் சிலை முன்பு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஜயகுமார் என்ற விஜய்வசந்த் ஆகியோரை ஆதரித்து திறந்தவேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி வந்திருக்கிறார். அவர் இப்போது ஊர் ஊராக போய்க்கொண்டு இருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் இப்போது ஊர் ஊராக போய்க்கொண்டு இருக்கிறார். இதனை சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும், நான் என்ன பாம்பா பல்லியா? என்று கேட்கிறார். பாம்பு பல்லிக்கு கூட விஷம் கம்மியா இருக்கும். ஆனால் துரோகத்திற்கு விஷம் அதிகம். யார் யாருக்கு துரோகம் செய்தார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் குமரிக்கு வந்தபோது ஒரு வார்த்தை கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அதிமுக உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் திட்டங்கள் எல்லாம் நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரிக்கு வரவில்லை என்று பேசியுள்ளார். நினைத்து பாருங்கள், அவர் முதலமைச்சர், ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தை புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்கணுமா வேண்டாமா? அவரே வாக்குமூலம் கொடுக்கிறார்.

அவரை முதல்வராக உட்கார வைக்கலாமா? என்பது எனது கேள்வி.  அவரை தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே அவர் ஏதும் செய்யவில்லை. அந்த ஊருக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமி என்றபோது எடப்பாடி பேரை சொல்லி அவர் பெயரை சொல்லாதீர்கள், அது எங்கள் ஊருக்கே கேவலம் என்று அங்கு சொன்னார்கள். அதுதான் அங்குள்ள நிலை. கடந்த முறை தக்கலைக்கு நான் வந்தபோது மத்திய அரசு புதிய பன்னாட்டு முனையம் அமைக்கப்போகிறது, மீனவர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்று நமது பேராயர்கள் முறையிட்டார்கள். எனவே திமுக ஆட்சியில் அனுமதி தரமாட்டோம் என்று உறுதிமொழி கூறி சென்றேன். அதன் பிறகு முதல்வர் குமரி வந்தார். இங்கு வந்து ஸ்டாலின் பொய் சொல்கிறார், எந்த சரக்கு பெட்டகமும் அமைக்கப்போவது இல்லை, ஸ்டாலின் சொல்வதை நம்பாதீர்கள் என்றார்.

மிஸ்டர் பழனிசாமி அவர்களே, நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் இருப்பது ஆதாரம், ஆதாரத்துடன் வந்துள்ளேன். 20.2.2021 அன்று அதிகாரபூர்வமான மத்திய அரசின் துறைமுக விளம்பரம் பத்திரிகையில் வந்துள்ளது. விஏஒ சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட், சிவில் இன்ஜினியரிங் டிபார்ட் மென்ட் விளம்பரம் தெளிவாக வந்துள்ளது. இதனை கூட தெரியாத முதல்வர் உள்ளார். அப்படிப்பட்ட முதல்வர் ஆள தகுதியுள்ளவரா? என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இப்போ இல்லை என்று கூறுவார். தேர்தலுக்கு பிறகு மாற்றி சொல்வார். உறுதியாக சொல்கிறோம் நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம். நாம் அனுமதி தரமாட்டோம். இது உறுதி.

இன்று பிரதமர் தமிழகத்திற்கு வழக்கம்போல் வருகிறார், அவரும் வழக்கம்போல் பொய் சொல்லி செல்கிறார். அவர் தமிழகத்திற்கு வர வர பிஜேபிக்கு ஓட்டு கம்மியாகப் போகிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அதுதான் நடக்க போகிறது. அவர் போன முறை வந்தார். தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்கையை உருவாக்கி கொடுத்துவிட்டதாக பேசி சென்றார். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பிரதமர் மோடி எதிர்கட்சியாக இருந்தபோது இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை, அதனால் அண்டை நாடு சீண்டி பார்க்கிறது என்று மன்மோகன்சிங்கை கொச்சைபடுத்தினார்.

குறை சொன்ன அவர் 2014ல் பிரதமராக பொறுப்பு வந்தார். மீனவர்களை காக்க கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2014ம் ஆண்டு ஜூன் 17ல் இந்திய - இலங்கை அமைச்சரிடம் பேச்சு நடத்தினார். ஏழு வருடம் ஆனது, இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இன்றும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. பா.ஜ அரசு, மோடி கண்டுகொள்ளவில்லை, தட்டிக்கேட்பது இல்லை. தமிழகத்தில் கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு  பாஜ ஆட்சி பல கொடுமைகளை தொடர்ந்து செய்கிறது. முக்கியமாக சிஏஏ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். இதனை எதிர்த்து திமுக, மற்ற கட்சிகள் கண்டித்தது, எதிர்த்தது. ஆனால் மாநிலங்களவையில் அதிமுகவின் 11 எம்பிக்கள், அதிமுக தேர்தல் கூட்டு வைத்துள்ள பாமக அன்புமணி ராமதாஸ், ஓட்டு போட்டதால் அது அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்ப்போம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். இது பச்சை துரோகம். மக்களை ஏமாற்றுகிறார்கள்.

சிறுபான்மை சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதை, இந்த சட்டத்தை திமுக தொடக்கத்தில் இருந்து எதிர்த்தது, நானே 2 கோடி கையெழுத்து வாங்கி டெல்லி சென்று ஜனாதிபதியிடம் கொடுத்தோம். சட்டமன்றத்தில் இதனை எதிர்த்து பேசினோம். இதனால் கஷ்டமும் இல்லை, தீமை இல்லை என்று பழனிசாமி வாதிட்டார். நாம் சட்டமன்றத்தில் தெளிவாக அதன் கொடுமைகளை பேசினோம். அதனை பற்றி கவலைப்படாமல் இப்போது நாடகம் நடத்தி வருகிறார்.
அப்படி கூறுபவர்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம், எதிர்க்கப்போகிறோம், அதற்காக வாதிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதை சிறுபான்மை மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதிமொழிகள், வாக்குறுதிகள் நிறைவேற்ற உள்ளோம் என்று கூறினோம். அதில் 505 வாக்குறுதிகள் உள்ளன.

ஆகவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல நமது மானத்தை, மரியாதையை காப்பாற்றும் தேர்தல்.
இது திராவிட மண், தமிழை அழிக்க ஒழிக்க சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மதவெறியை கொண்டு திட்டமிட்டுள்ளார்கள். மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் நிச்சயம் பலிக்காது. வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kumari ,AIADMK ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...