×

தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

நாமக்கல், மார்ச் 31: சட்டமன்ற தேர்தல் நாளான வரும் 6ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 6ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. பொதுத்தேர்தல் நடைபெறும் நாளன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், தேர்தல் தினத்தன்று அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அதன்படி, தொழிற்சாலைகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பீடி -சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் தேர்தல்அன்று ஓட்டுபோடும் வகையில்,  சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையின் கீழ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரை முத்திரை ஆய்வாளர் 97153 66345, தொழிலாளர் துணை ஆய்வாளர் 99446 25051, தொழிலாளர் உதவி ஆணையர் 87784 31380 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Assistant Commissioner of Labor ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு...