×

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மயான பிரச்சனைக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை


ராசிபுரம், மார்ச் 31: பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மயான பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் அருகே உள்ளது பிள்ளாநல்லூர் பேரூராட்சி. 12 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சி பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட 3-4வது வார்டுக்கு இடைப்பட்ட பகுதியில் பொது மயானம் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த மயானத்தை முறையாக பராமரித்து நந்தவனம் போல் வைத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள மற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் வந்து பார்த்து விட்டுச் செல்லும் அளவிற்கு இந்த மயானம் முன்மாதிரியாக விளங்கியது. இதேபோல், அந்தந்த பகுதியில் உள்ள மயானத்தை பூங்கா போல் பராமரிக்க வேண்டுமென அப்போதைய மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியது.

ஆனால், காலப்போக்கில் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து மயானத்தில் கொட்டினர். அதனை மக்கும் குப்பை -மக்காத குப்பை என தரம் பிரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் முறையாக பராமரிக்காமல் விட்டதால் மலைபோல் குவிந்தன. குப்பையோடு குப்பையாக வீசப்படும் பொருட்களை சேகரிப்பதற்காக மர்ம நபர்கள் இரவு நேரத்தில் தீ வைப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால், மயானம் முழுவதும் புகை மண்டலம் பரவி வருகிறது. அடிக்கடி தீ வைப்பதால் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்களும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குப்பை கழிவுகளுக்கு தீ வைப்பதால் பனை மர உயரத்திறகு கொளுந்து விட்டு எரிகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மின் கம்பி தீயில் கருகி வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பல்வேறு வீடுகளில் டிவிக்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்துள்ளன. இதனை கண்டித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களிக்காமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்ததால் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சமரசப்படுத்தினர். ஆனால், நிரந்தர தீர்வு காண எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலும் வந்து விட்டது. எனவே, மயான பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பதாக உள்ளோம் என்றனர்.

Tags : Pillanallur municipality ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு