9,494 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 31: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,494 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 86 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2,715 வாக்குப்பதிவு இயந்திரம், 2,715 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 2,944 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் என மொத்தம் 8,374 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மேலும், 796 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 156 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 168 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன்மூலம் 2,298 வாக்குப்பதிவு மையங்களுக்கு 9,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிட உள்ள வேட்பாளரது புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். நிகழ்ச்சியின் போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓசூர் குணசேகரன், வேப்பனஹள்ளி கோபு, தளி ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>