திருப்போரூர் சட்டமன்ற தேர்தலில் வெல்வது யார் வி.சி.க - பா.ம.க இடையே கடும் போட்டி

திருப்போரூர், மார்ச் 30:   திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. வேட்பாளராக எஸ்.எஸ். பாலாஜி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக திருக்கச்சசூர் ஆறுமுகம், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டபாணி, நாம் தமிழர் சார்பில் மோகனசுந்தரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் லாவண்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுமட்டுமின்றி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பக்கிரி அம்பேத்கர் என்பவரும், மற்றும் 5 சுயேச்சைகளும் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு திருப்போரூர் தனி வட்டம் உருவாக்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஜெயலலிதா இறப்பு அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். தர்மயுத்தம், கூவத்தூர் கும்மாளம், எடப்பாடி முதல்வராதல் போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளால் மக்களையும் இந்த தொகுதியையும் அ.தி.மு.க. மறந்தே விட்டது.

திருக்கழுக்குன்றம் அருகே வாயலூரில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டதைத் தவிர தொகுதியில் வேறு சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு திட்டத்தையும் இந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் செய்யவில்லை.

இதனால் 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில் என்கிற இதயவர்மன் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநிலத்தில் ஆளுங்கட்சி, மத்தியிலும் ஆதரவு கட்சியே ஆளுங்கட்சி, ஒரு ஓட்டிற்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தும் திருப்போரூர் தொகுதியில் அ.தி.மு.க.வால் ஜெயிக்க முடியவில்லை. தி.மு.க. இந்த தொகுதியில் வலுவாக இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் மாமல்லபுரம்.  கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு பேருந்து நிலையம் இல்லை என்பதைச் சொல்லவே அப்பகுதி மக்கள் கூச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர் தொகுதி தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை

1) ஆண் வாக்காளர்கள் -143556

2) பெண் வாக்காளர்கள் -149658

3) திருநங்கையர்     -       37

மொத்த வாக்காளர்கள் -293251

கடந்த 1967ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை 54 ஆண்டுகளில் நடைபெற்ற 12 தேர்தல்களில் 8 முறை தி.மு.க.வும், 4 முறை அ.தி.மு-.க.வும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையே மட்டும்தான் போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரு பிரதான கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டன. தி.மு.க. கூட்டணிக் கட்சியான வி.சி.க.வின் வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் இயக்கங்கள் என பல்வேறு கட்சிகளின் ஓட்டு வங்கியை நம்பி களம் இறங்கி இருக்கிறார். களத்தில் இருக்கும் பா.ம.க., வி.சி.க., அ.ம.மு.க. ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்கள் என்பதால் வாக்குகள் பிரிந்து செல்லும் நிலை உள்ளதாக கருதப்படுகிறது.

மக்கள் மனதில் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி மீதான சலிப்பு,  கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்குள் எந்த திட்டமும் செயல்படுத்தப் படாத நிலை ஒரு வித வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாலும் தமிழகம் முழுவதும் வீசும் தி.மு.க. ஆதரவு அலை திருப்போரூர் தொகுதியிலும் வீசத்தான் செய்கிறது.  சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகியவற்றின் எதிரொலி பா.ம.க. வேட்பாளர் செல்லும் இடங்களில் எதிரொலிக்கிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் போட்டியிடும் மதுராந்தகம் தொகுதிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத் போட்டியிடும் செய்யூர் தொகுதிக்கும் சென்று வேலை செய்கின்றனர். இதனால் பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் பா.ம.க.வின் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி களத்தில் இருக்கிறார். இதனால் பிரசாரத்தின் போது அ.தி.மு.க.வினரை விட பா.ம.க.வினரே அதிகம் பேர் உள்ளனர். வேட்பாளர் அ.தி.மு.க.வின் பலத்தை நம்பியுள்ளார். அ.ம.மு.க.வும், தே.மு.தி.க.வும் பிரிக்கப்போகும் வாக்குகள் இவருக்கு விழ வேண்டிய வாக்குகளே ஆகும். இதுவும் பா.ம.க. வேட்பாளருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், வி.சி.க. வேட்பாளரோ தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் மட்டுமின்றி ஆட்சி மீதான அதிருப்தி வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பர் என்ற நம்பிக்கையில் உள்ளார்.  மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்களின் நேரடிப்பிரசாரம் தனக்கு கைகொடுக்கும் என வி.சி.க. வேட்பாளர் நம்பிக்கையுடன் உள்ளார்.

கணிக்க முடியாத அளவிற்கு தொகுதியின் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கணிப்பு இழுபறியாகவே இருந்தாலும் ஒரிரு ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றியிருக்கும்.  

தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்

* போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் கோவளம் - கேளம்பாக்கம் சந்திப்பு, பூஞ்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

* கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், நெம்மேலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. ஆனால் மீன்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன கூடம் இல்லை. இதை அமைத்துக் கொடுத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும்.

* சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் படித்தும் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதனால், இங்குள்ள சிறுசேரி மென்பொருள் பூங்கா, ஆலத்தூர் மருந்து தொழிற்பேட்டை ஆகியவற்றில் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>