×

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி இறந்தவர் உடலுடன் உறவினர்கள் சாலைமறியல் கடலூரில் பரபரப்பு

கடலூர், மார்ச் 30: ஒடிசாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர், இவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தில்நாதன் (46) மீன் லாரி டிரைவர். கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்தழகன் மகன் மதன்குமார்(37). லைன் தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் மகன் லெனின்(42) இவரும் செல்லங்குப்பம் மீன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். 3 பேரும் கடலூரில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு மீன் ஏற்றும் லாரியில் சென்றனர். செந்தில்நாதன் லாரியை பின்பக்கமாக இயக்கியபோது அருகில் இருந்த  டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் செந்தில்நாதன், மதன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லெனின் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி பலியான செந்தில்நாதன் மற்றும் மதன்குமார் ஆகியோரின் உடல்கள் ஒடிசாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மதியம் கடலூர் கொண்டு வரப்பட்டது. இறந்த செந்தில்நாதன் மற்றும் மதன்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி செந்தில்நாதனின் உடலை கடலூர்- சிதம்பரம் சாலையில் நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனின் உறவினர்கள் மற்றும் செந்தில்நாதன் வேலை செய்த மீன் கம்பெனி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க மீன் கம்பெனி நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Odisha ,Cuddalore ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை