×

கொரோனா அச்சுறுத்துவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி, மார்ச் 30:  புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:  கொரோனா மறுபடியும் நம்மை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை முதலில் நாம் உணர வேண்டும். 90 சதவீத மக்களுக்கு முகக்கவசம் போடுவது பாதுகாப்பை தருகிறது என்று தெரிந்தாலும் கூட 50 சதவீதம் பேர் தான் அதனை கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது 406 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

 எனவே, முகக்கவசம் ஒரு உயிர்க்கவசம், உடல் கவசம். மூக்கு, வாய் மட்டும் மூடுவதன் மூலம் கொரோனா நம்முடைய உடலுக்கு செல்ல முடியாத தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே, கூட்டமாக உள்ள இடத்தில் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும். ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அதனால் 406 பேருக்கு நோய் தொற்றுகிறது. அதே நேரத்தில், 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்தால் அந்த எண்ணிக்கை 15 ஆக குறைகிறது. 75 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்தால் அந்த எண்ணிக்கை 2 அல்லது 3 ஆக குறைகிறது. எனவே, தடுப்பூசி போட வேண்டும். முகக்கவசமும் போட வேண்டும். நீங்கள் (மக்கள்) எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

Tags : Governor ,Tamils ,Corona ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!