×

இபிஎஸ், ஓபிஎஸ், சண்முகத்தை அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு விழுப்புரம் போலீசார் விசாரணை

விழுப்புரம், மார்ச் 30: முதலமைச்சர், அமைச்சரை அவதூறாக பேசியதாக, விழுப்புரம் காவல் நிலையத்தில் அமமுக கட்சித்தலைவர் டிடிவி தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 23ம் தேதி, அமமுக, தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதிய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்பதாகவும், சசிகலா காலில் விழுந்து கிடந்தவர் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்தும் பேசினார். மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வரும் தேர்தலில் ரூ.200 கோடியை இறக்கியுள்ளதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப் போவதாகவும் பேசினார்.  இந்நிலையில், சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாபுமுருகவேல் என்பவர், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை இழிவாக பேசியதாகவும், இதனால் அவர்களது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகவும் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 153, 171(G), 500, 504 ஐபிசி, 125 rp act 1951 (மோதலை உண்டு பண்ணும் வகையில் பேசியது, அவதூறாக பேசுதல்) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Villupuram ,DTV Dinakaran ,EPS ,OBS ,Shanmugam ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...