குன்னூர் நகரம், ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரிப்பு

ஊட்டி, மார்ச் 30: குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வரும் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த இரு நாட்களாக குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசியதாவது:குன்னூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். மேலும், குன்னூர் நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிட பாடுபடுவேன்.

ஓட்டப்பட்டரை பகுதியில் சமுதாய கூடம் அமைக்கப்படும். அதேபோல், எல்ஐசி., காலனி பகுதியில், கன்னிமாரியம்மன் கோயில் பகுதிகளில் குடிநீர், நடைபாதை மற்றும் தெரு விளக்கு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றிட பாடுபடுவேன்’ என்றார். தொடர்ந்து, குன்னூரின் பல்வேறு பகுதிகளிலும், குன்னூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது, குன்னூர் நகர செயலாளர் ராமாசாமி, அன்வர்கான், பொதுக்குழு உறுப்பனர்கள் செல்வம், சதக்கத்துல்லா, ஜாகிர், முபாரக், கலீம், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பில்லன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில், இளங்கோ, ராஜூ. மாவட்ட பொருளாளர் நாசர் அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம், இந்திய கம்யூ., பெள்ளி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories:

>