குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை ஆதரித்து நடிகை விந்தியா கோத்தகிரியில் பிரசாரம்

ஊட்டி, மார்ச் 30:  குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை ஆதரித்து நடிகை விந்தியா கோத்தகிரி பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.  வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போது அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத் தற்போது குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  கிராமப்புறங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரை ஆதரித்து கோத்தகிரி பகுதியில் நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்,`மக்களை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி உள்ளார். ெகாரோனா காலத்தின் போது, ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை அனைத்து ரேஷன் பொருட்களும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதேபோல், பொதுமக்களுக்கு ரூ.1000 நிதியுதவியும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கினார். பொங்கல் பரிசு ரூ.2500ஐ வழங்கி அனைத்து மக்களின் துயரை துடைத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை காத்தார். பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு நகை கடன்களை தள்ளுபடி செய்து மக்களை காத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

பெண்களின் துயரை துடைக்க வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சோலார் மின் அடுப்பு, 6 சமையல் எரிவாய சிலிண்டர், முதியோருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதவிர, 163 மகத்தான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தேர்தல் வாக்குறுதிக்காக மட்டும் கொண்டு வரப்பட்டது அல்ல. தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள்’ என்றார். இந்த பிரசாரத்தின்போது, கோத்தகிரி எம்எல்ஏ சாந்திராமு, முன்னாள் எம்.பி. அர்ச்சுணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More