ஆதிவாசி மக்களுடன் நடனமாடி அமைச்சர் வேலுமணி பிரசாரம்

கோவை, மார்ச் 30:  கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் வேலுமணி ஆதிவாசி மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில், அமைச்சர் எஸ்பி.வேலுமணி போட்டியிடுகிறார். அவர் சில தினங்களாக மக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட டி.என்.ஆர் நகர், பார்பர் காலனி, சந்தைப்பேட்டை, காளியண்ணன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், ‘‘தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குடும்பமும் எனது குடும்பமாக பாவித்து வருகிறேன். கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை காக்க, இலவச நோய் எதிர்ப்பு மாத்திரைகள், கபசுரகுடிநீர் பொடிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. கண்ணை இமை காப்பதுபோல மக்களை பாதுகாத்து வருகிறது அதிமுக அரசு. மக்களுக்காக பாடுபட்டது யார்? என மக்களுக்கு தெரியும். வருகின்ற தேர்தலில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வதோடு மட்டுமின்றி அதிமுக ஆட்சியை தமிழகத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து தனது தொகுதிக்குட்பட்ட அட்டக்கல் பகுதியில் ஆதிவாசி மக்களுடன் அமைச்சர் வேலுமணி பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது அதிமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>