ஈரோடு புறநகரில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்

ஈரோடு, மார்ச் 30: ஈரோடு புறநகரில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என மேற்கு தொகுதி வேட்பாளர் சு.முத்துசாமி மக்களிடத்தில் உறுதியளித்தார். ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சு.முத்துசாமி நேற்று சென்னிமலைபாளையம், கொளத்துப்பாளையம், செம்பாண்டாம்பாளையம், செல்லப்பம்பாளையம், மண்ணாங்காட்டு வலசு, கே.கே.வலசு, ஆண்டிகாடு, ஓலப்பாளையம், குட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களிடம் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு புறநகர் பகுதியில் எவ்வித மேம்பாட்டு வசதியும் அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். அதுமட்டும் அல்லாமல் மேற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, புறநகர் பகுதியையும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். புறநகரில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.  ஏற்கனவே, உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். சாலை கட்டமைப்பினை வலுப்படுத்த மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புறநகர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆவதற்கு, மேற்கு தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடாந்து, வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு, கோரக்காட்டு வலசு, கொளத்துப்பாளையம் காலனி, பெருந்துறை ஆர்.எஸ். கொடக்கிட்டாம்பாளையம், கொம்மகோவில் புதூர், ஹவுசிங் யூனிட், குமரன் நகர், கூனம்பட்டி, உருமாண்டம்பாளையம், கும்மகாளிபாளையம், முதலியாக்கவுண்டன் வலசு, மோளக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சு.முத்துசாமி வீதி, வீதியாக சென்று மக்களிடத்தில் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Related Stories:

>