×

தேர்தல் வாக்குறுதி வெளியீடு குடிசை இல்லாத தொகுதியாக வீரபாண்டியை மாற்றுவேன் திமுக வேட்பாளர் டாக்டர் தருண் உறுதி

சேலம், மார்ச் 30: வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் தருண், தொகுதியில் பல பிரச்னைகளை தீர்க்கும் வகையில், தனியாக தேர்தல் வாக்குறுதிகள் தயாரித்து, நேற்று வீரபாண்டி தேர்தல் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்ஆர்.சிவலிங்கம் தேர்தல் வாக்குறுதியை வௌியிட, தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, பார்த்திபன் எம்.பி., ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது திமுக வேட்பாளர் தருண் கூறியதாவது: வீரபாண்டி தொகுதியில் 2 பிரச்னைகள் முக்கியமாக உள்ளது. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்குவதை தடுக்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வேன். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, அப்பகுதி மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். வீரபாண்டியை குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள், காவேரி கூட்டு குடிநீர் சீராக வழங்கப்படும். பனமரத்துப்பட்டியில் மலர் விற்பனை நிலையம் அமைக்கப்படும். பனமரத்துப்பட்டி ஏரி தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படும். இளம்பிள்ளையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், சுரேஷ்குமார், மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Weerapandi ,Varun ,
× RELATED ராமர் கோயில் கட்டியது தேர்தல் பிரச்னை அல்ல: மேனகா காந்தி பேட்டி