×

மானாமதுரையில் மூன்று ஆண்டாக போராடியும் மூடப்படாத டாஸ்மாக் கடை வேடிக்கை பார்க்கும் சிட்டிங் எம்எல்ஏ: பெண்கள், மாணவிகள் அவதி

மானாமதுரை, மார்ச் 30:  மதுரை- ராமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் சுரங்கபாதையும் அமைக்கப்பட்டது. இதன் வழியாக சிவகங்கைக்கும், மானாமதுரை டவுனுக்கும் வாகனங்கள் செல்கின்றன. இதனருகே மதுரை- ராமேஸ்வரம் ரயில்வே இருப்புபாதை இருப்பதால் அதன்மேல் உயர்மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளது. இதன் கீழே நகருக்குள் செல்வதற்கும், ஆனந்தபுரம், செல்லமுத்து நகர், பெமினாநகர் உள்ளிட்ட நகர்களுக்கு செல்வதற்கும் அருகேயுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஒர்க்ஷாப்புகள், தனியார் பள்ளி உள்ளிட்டவைக்கு செல்வதற்காகவும் உயர்மட்ட பாலத்தின் கீழே சர்வீஸ்ரோடு அமைக்கப்பட்டு போக்குவரத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ரயில்வேகேட் அருகே உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டதால் அங்கு குடிகாரர்கள் இரவுநேரங்களில் முகாமிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வாகனங்களில் விபத்துகளில் சிக்கி விபத்தும் ஏற்பட்டது. இதுதவிர புறநகர் பகுதியாக இருப்பதால் சமூகவிரோதிகள் டாஸ்மாக் கடைக்கு வருவதால் அப்பகுதியில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியது. மேலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் புதுபஸ்ஸ்டாண்டு சென்று அங்கிருந்து நகருக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக நான்கு வழிச்சாலையின் பாலத்திற்கு நேர் கீழே உள்ள சர்வீஸ் ரோட்டிலேயே டாஸ்மாக் கடை அமைத்துள்ளனர். இதனை மூட கோரி அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் 2018ம் ஆண்டு பல்வேறு போராட்டங்களை செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஜெயலலிதா மறைவுக்குபின் அமமுகவிற்கு சென்ற அப்போதைய எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட பிறகு வந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாகராஜனும் இந்த டாஸ்மாக் கடையை மூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதாக்குறைக்கு அதே பகுதியிலேயே கூடுதலாக இன்னொரு டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டதால் குடியிருப்போர், சமூகநல ஆர்வலர்களிடையே அதிமுக சிட்டிங் எம்எல்ஏ நாகராஜன் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் மது கடை திறக்கப்பட்டதால் குடிகாரர்கள் இரவுநேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலே முகாமிட்டு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சர்வீஸ்ரோடு அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் தனியார்பள்ளி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பகல்நேரங்களில் குடிகாரர்களால் தனியாக இருக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் குடிகாரர்களின் அடாவடி செயலால் இங்கு வர மறுக்கின்றனர். மேலும் போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வும் அடிக்கடி நடந்து வருகிறது. ஒரு கடை இருந்தபோதே சமாளிக்க முடியாமல் திணறி வந்தோம். மானாமதுரையில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அந்த கடையில் அருகிலேயே மற்றொரு கடையும் வந்தும் அதனை வேடிக்கை பார்க்கும் வகையில் சிட்டிங் எம்எல்ஏ நாகராஜனின் செயல்பாடுகள் உள்ளது. எனவே இந்த முறை அதிமுக வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Tags : MLA ,Manamadurai ,Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை