×

களக்காடு ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பிரசாரம் நாங்குநேரியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் உறுதி

களக்காடு,  மார்ச் 30:  நாங்குநேரி  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதி முழுவதும் கிராமம்  கிராமமாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். களக்காடு  ஒன்றியம் கலுங்கடி, சூரங்குடி, வடுகச்சிமதில், கோவிலம்மாள்புரம், மேல  மலையநேரி, ஊச்சிகுளம், சவளைக்காரன்குளம், குட்டுவன்குளம், உடையடிதட்டு,  உதயமார்த்தாண்டபேரி, தோப்பூர், எஸ்.என்,பள்ளிவாசல், ராமகிருஷ்ணாபுரம்,  சாலைப்புதூர்  மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று திறந்த ஜீப்பில்  சென்று வாக்கு சேகரித்தார். மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் பெண்கள்  வரவேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘கடந்த இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நான், அதை தோல்வியாகக் கருதவில்லை. அமைச்சர்கள், எம்.பி.,  எல்.எல்.ஏ.க்கள், நடிகர், நடிகைகள் என அதிமுகவினர் அனைவரும் கிராமங்களில்  முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து அதன் மூலமாகவே வெற்றி பெற்றனர். ஆனால்,  அதன்பிறகும் உங்களையே நாடி வந்த நான், உங்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றி  வருகிறேன். எனவே, ரூ.500, ஆயிரத்திற்கு நீங்கள் விலை போய் விடாதீர்கள். நான்  வெற்றி பெற்றால் 5 ஆண்டுகள்  உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும்,  உங்களின் அடுத்த தலைமுறையினருக்காகவும் உழைப்பேன்.

நாங்குநேரி தொகுதி  மக்களுக்கு எத்தகைய நலப்பணிகள் செய்ய முடியுமோ, அவை அத்தனையும் ஒன்றுறு விடாமல் ெசய்வேன். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பெற்று, ஒரு  பைசா கூட வீணாகாமல் தொகுதி மக்களின் நலனுக்காக செலவிடப்படும். அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் நாங்குநேரி மக்களுக்காக பெற்றுத் தருவேன். நாங்குநேரி தொகுதி மக்களுக்காக 21 வாக்குறுதிகள் அளித்துள்ளேன். 5 ஆண்டுகளுக்குள் அத்தனையும் நிறைவேற்றி என் மக்களின் வாழ்வாதாரத்தை ேமம்படுத்துவது தான்  எனது முதல் பணியாகும். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள், தொகுதி மக்கள்  முன்னேற எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

விமானப்படையில்  பணியாற்றிய நான் என்றுமே சாதி, சமயம் பார்ப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக  இங்குள்ளவர்களுக்கு அரசு வேலை இல்லை. ஆனால், தமிழே தெரியாத வடமாநிலத்தினர்  இங்கு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இது நமது இளைஞர்களை பாதிக்கும்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  முதல்வரும், துணை முதல்வரும் பிரதமருக்கு  அடிமையாகி விட்டார்கள். ஆனால்,  பிரதமரோ தமிழக மக்களை மாற்றாந்தாய்  மனப்பான்மையுடன்தான் பார்ப்பார். என்னை வெற்றிபெற செய்தால் அகில  இந்திய அளவில் முன்மாதிரி தொகுதியாக நாங்குநேரியை மாற்றுவேன்’’ என்றார். பிரசாரத்தில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் தனபால், அலெக்ஸ், முன்னாள்  வட்டாரத் தலைவர்கள் தமிழ்ச்செல்வன், காளபெருமாள், திமுக ஒன்றியச்  செயலாளர்கள் ராஜன், செல்வகருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Kang ,Nanguneri ,Kalakadu ,Union ,Ruby Manokaran ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...