துபாயில் இருந்து திரும்பியபோது திருச்சி விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

திருச்சி, மார்ச் 30: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கொரோனா மீட்பு சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று துபாயிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள், உடைமைகளை வான் நுண்ணறிவு மற்றும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின்போது தேடப்படும் குற்றவாளியாக வாலிபரின் பாஸ்போர்ட் தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் வாலிபர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சாளுவன்பேட்டை தெரு சம்பத்குமார் மகன் செந்தில்குமார் (37) என்பதும், இவர் மீது வலங்கைமான் போலீசார் கடந்த 2018ம் ஆண்டில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு எல்ஓசி அறிவிப்பு வெளியிட்டதன் பேரில் நேற்று அவர் சிக்கினார். தொடர்ந்து செந்தில்குமாரை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் இதுகுறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>