திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி உணவு பாதுகாப்புக்கு உயிர்நாடியான நீர்ப்பாசனம் சரியாக அமைய வேண்டும் பூண்டி கலைவாணனை ஆதரித்து சீதாராம்யெச்சூரி பிரசாரம்

திருவாரூர். மார்ச் 30: திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து பழைய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் பிறந்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு என தமிழக வரலாற்றில் முக்கிய இடமுண்டு. அவரிடம்தான் அனைவரும் மனிதநேயத்தை கற்றுக்கொண்டனர். திருவாரூர் ஆழித்தேரோட்டம் பிரசித்தி பெற்றது. அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணனின் வெற்றி சத்தம் மோடியின் காதுகளுக்கு கேட்க வேண்டும். தமிழகம் தனித்துவம் கொண்ட நாடு. மத்திய அரசின் வேட்டை காடு அல்ல. புதிய வேளாண் சட்டங்கள் காரணமாக இன்று இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துகொண்டுள்ளது.

உங்களுக்கும், எனக்கும் உணவு கிடைக்காத ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. நிலம் என்ற இயற்கை கொடை கார்பரேட்டுகளின் கையில் செல்லும் நிலையுள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ள பின்னரும் கூட குறைந்தபட்சம் பேச்சுவார்தை கூட நடத்தாத அரசாக மோடி அரசு உள்ளது. மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து அரசியல் சட்டங்களை அழித்து வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒத்துப்பாடி வருகின்றனர். மேலும் விவசாயமும், விவசாயிகளும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே உணவு பாதுகாப்பு என்பது சாத்தியமாகும். இதற்கு உயிர்நாடியான நீர்பாசனம் சரியாகஅமைய வேண்டும் என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு உண்மையான பரிசு கிடைக்கவும், போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு சீதாராம்யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>