நிவர் புயல் நிதியில் முறைகேடு நகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

தஞ்சை, மார்ச் 30: நிவர் புயல் நிதியில் முறைகேடு செய்த பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகளை விசாரனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட நிவர் புயல் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அரசு ரூ.600 கோடி நிதி தமிழகம் முழுவதும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், சில அலுவலர்கள் மீது மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணி இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகாம்களில் தங்க வைத்து அவர்களை பராமரிக்கவும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்து அவர்களுக்கு வழங்கிடவும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் பட்டுக்கோட்டை நகர்ப்புறத்தில் வாழும் பெரும்பாண்மையான மக்கள் தினக்கூலிகளாகவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புரவி மற்றும் நிவெர் புயல் மற்றும் அடுத்தடுத்து வந்த பேரிடரால் மக்கள் பெரிதும் துன்ப துயரத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தேவையான பொருட்கள் வழங்குவதற்கும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அதில் ஒதுக்கிய 3 லட்ச ரூபாய் நிதியை பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகள் சிலர் போலியாக கணக்கு எழுதி கையெழுத்திட்டு கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது போன்று மக்கள் பணத்தை சுருட்டிய பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உயர்மட்ட விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும். மேலும் மக்களுக்கான பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>