×

2886 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி வசதி

தஞ்சை, மார்ச் 30: தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1163 வாக்குப்பதிவு மையங்களில் 2886 வாக்குச்சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் தங்களது வாக்குரிமையை செலுத்த ஏதுவாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சாய்வு தளம் அமைத்து கொடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வசதி செய்து கொடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 1163 மையங்களில் 2886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்கள் அமைந்துள்ள 1163 இடங்களுக்கும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிக்காக 350 சக்கர நாற்காலிகள் புதிதாக வாங்கப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எஞ்சிய சக்கர நாற்காலிகள் பல்வேறு அரசு அலுவலங்களில் உள்ள 813 மடக்கு சக்கர நாற்காலிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும். பார்வையற்றோர்கள் வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்பட்டுள்ள பிரெய்ல் மாதிரி வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் முகக்கவசம் அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். முன்னதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு சக்கர நாற்காலி அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு