×

ஆளுங்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

புதுக்கோட்டை, மார்ச்30:புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி,நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 57 பறக்கும்படை குழுவினரும், 57 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டிய முக்கியமான இடங்களை வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினரால் 72 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.கண்காணிப்பு அலுவலர்கள் அரைமணி நேரத்திற்குமேல் ஒரே இடத்தில் நிற்காமல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கண்காணிப்பு இடங்களை அவர்களின் பணிநேரத்திற்குள் கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டும் இல்லாமல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகங்களில் ‘கருடா’ செயலி மூலம் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடன், வீடியோ கண்காணிப்பு குழுவினரும் இணைந்து வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் பதிவு செய்யப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தொடர்புடைய வேட்பாளரின் செலவு கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பறக்கும் படையினர் மூலம் இதுவரை ரூ.9 கோடி மதிப்பிலான பணம், நகை, வெடி மருந்துகள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இதரப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவைகள் உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதே போன்று வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்படும் பணம், நகை உள்ளிட்ட விபரங்கள் குறித்தும் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரை திருமயம் மற்றும் விராலிமலை சட்டமன்ற தொகுதிகள் செலவு உணர்திறன் பகுதியாக உள்ளது. இத்தொகுதிகளில் கூடுதலாக நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, பறக்கும்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்குழுவினருக்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணியாற்ற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு கண்காணிப்பு பணி குறித்து விபரங்களை கேட்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் மட்டுமல்லாது மாவட்டத்தின் உட்பகுதியிலும் 36 சோதனை சாவடிகள் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார், தாசில்தார் முருகப்பன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Pudukottai Dashildar's office ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ