×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பேரணி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 14 கிமீ தூரம் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பேரணி நேற்று நடந்தது. அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய பேரணியில், கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், எஸ்பி அரவிந்த், டிஆர்ஓ முத்துகுமாரசாமி உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா நுழைவு வாயிலில் தொடங்கிய சைக்கிள் பேரணி, பஸ் நிலையம், மாட வீதி, செங்கம் சாலை, அபய மண்டபம் வழியாக மீண்டும் அண்ணா நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. மேலும், கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய வரைபடம், தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் ஆகியவை வரையப்பட்டிருந்தன.
அப்போது, 4ம் வகுப்பு மாணவி சாத்விகா, தமிழகத்தில் உளள 243 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லி அசத்தினார். எனவே, மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும், கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருந்த 136 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு, நூறு சதவீதம் வாக்களிப்போம் எனும் வாசகம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை தனித்தனியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Cycle Rally ,Thiruvannamalai Kiriwalapatha ,Sandeep Nanduri ,
× RELATED போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி