திருவண்ணாமலையில் போலீஸ் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது: தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலையில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 13வது மாதமாக பங்குனி மாத கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். மேலும், கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையும் நிலையில், கிரிவலம் செல்வதை தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.12 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 1.18 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, திருவண்ணாமலையில் நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்களை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கட்டுப்படுத்தவில்லை. மேலும், கடந்த மாத பவுர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கிரிவல பக்தர்களை திருப்பி அனுப்பினர். ஆனால், நேற்று கிரிவலப் பாதையில் எந்த இடத்திலும் தடுப்புகள் அமைக்கவில்லை. மேலும், கிரிவலம் சென்ற பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை. சிறுவர்கள், முதியவர்கள் உட்பட பலரும் கிரிவலம் சென்றனர். ெகாரோனா பரவல் மீண்டும் தீவிரமடையும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றது அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கிரிவலம் சென்ற பக்தர்களை தடுக்காவிட்டாலும், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஆலோசனைகளை ஒலி பெருக்கி மூலம் வழங்கி, சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல அறிவுறுத்தியிருக்கலாம். முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியிருக்கலாம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.

Related Stories:

>