×

பவுர்ணமி வழிபாடுக்கு வந்தபோது பரிதாபம்: 4,560 அடி உயர பர்வதமலை மீது ஏறிய சென்னையை சேர்ந்தவர்கள் 2 பக்தர்கள் பலி

கலசபாக்கம், மார்ச் 29: பவுர்ணமி வழிபாடு செய்ய 4,560 அடி உயர பர்வதமலை மீது ஏறி சென்ற 2 பக்தர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பர்வதமலை சுமார் 4,560 அடி உயரம் கொண்டது. இந்த மலை மீது பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. பவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதுடன், பர்வதமலை மீது ஏறிச்சென்று சுவாமியை வழிபடுபடுவர். கிரிவலம் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், பவுர்ணமி வழிபாடு செய்வதற்காக, நேற்று முன்தினம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் திலீப்குமார்(19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்கள் 9 பேருடன் கலசபாக்கத்திற்கு வந்தனர். தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் 4,560 அடி உயர பர்வதமலை மீது ஏறி சென்றனர். கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அனைவரும் காலை 8 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர்.
அங்குள்ள அண்ணாமலையார் பாதம் அருகே வந்தபோது திலீப்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கடலாடி போலீசார் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று பரிசோதனை செய்தனர். அதில், திலீப்குமார் இறந்தது தெரியவந்தது.

அதேபோல், அங்குள்ள பாதி மண்டபம் அருகே சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு(75) என்பவரும் மயங்கிய நிலையில் இருந்தார். மருத்துவ பரிசோதனையில் அவரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 சடலங்களையும் டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்வத மலை ஏறும் வழிகளில் முதலுதவி சிகிச்சை இல்லாததால், ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். நேற்றும் 2 பேர் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என தெரிந்தும், சில சமூக விரோதிகள் நேற்று மாலை பர்வதமலையில் தீ வைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில், பர்வதமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தீ வைப்பது போன்ற சமூக விரோத செயல்களை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pavurnami ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...