×

வேலூர் சட்டமன்ற தொகுதியில் சமூக இடைவெளியின்றி தபால் வாக்களித்த அலுவலர்கள்

வேலூர், மார்ச் 29: வேலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் சமூக இடைவெளியின்றி தபால் வாக்குகளை பதிவு செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துவருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பணிபுரிய வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் 8,560 அலுவலர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2ம் கட்ட பயிற்சி நேற்று 5 மையங்களில் நடந்தது.

காட்பாடி தொகுதியில் காந்தி நகர் வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வேலூர் தொகுதியில் டிகேஎம் மகளிர் கல்லூரி, அணைக்கட்டு தொகுதியில் ஸ்பார்க் மெட்டரிக் பள்ளி, கே.வி.குப்பம் தொகுதியில் அம்மணாங்குப்பம் கே.எம்.ஜி.கல்லூரி, குடியாத்தம் தொகுதியில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி என 5 மையங்களில் 2ம் கட்ட பயிற்சி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இந்த பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அளித்தனர்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்களிக்க ஏற்கனவே விண்ணப்பம் 12 படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடந்த 21ம் ேததி நடந்த முதற்கட்ட பயிற்சியின்போது அரசு ஊழியர்கள் வழங்கினர். நேற்று நடந்த 2ம் கட்ட பயிற்சியின்போது அனைத்து கட்சியினர் முன்னிலையில் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வேலூர் டிகேஎம் கல்லூரியில் நடந்தது. நேற்று பிற்பகல் நடந்த தபால் வாக்கு பதிவின்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், சமூக இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தினர். ஆனால் கடைசி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் தேர்தல் தொடர்பான பயிற்சியில் அனைத்து அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரத்தை எவ்வாறு தயார் நிலையில் வைக்க வேண்டும்?, வாக்காளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும்போதே அவர்களின் பணிகள், அதற்குரிய படிவங்கள் பூர்த்தி செய்வது எப்படி? மை எப்படி வைக்கப்பட வேண்டும்?, வாக்குச்சாவடி அலுவலர்களின் பணி என்ன?, குளறுபடி இல்லாமல் விரைவாக வாக்குப்பதிவு நடத்துவது எப்படி? போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்து. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vallur Assembly ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்