×

நன்னிலம் தொகுதி வாக்காளர்களாக உங்களை பெற்றது இறைவன் தந்த வரம்

திருவாரூர், மார்ச் 29: நன்னிலம் தொகுதி வாக்காளர்களாக உங்களைப் பெற்றிருப்பது இறைவன் தந்த வரம் என வலங்கைமான் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் நேற்று கொட்டையூர், அரவூர், மாணிக்கமங்கலம், சாரநத்தம், பூனாயிருப்பு, மாத்தூர், திருவோணமங்கலம், புளியங்குடி, பெருங்குடி, சேத்தனூர், தென்குவளைவேலி, பூந்தோட்டம், ஆலங்குடி, புலவர்நத்தம், குருவாடி, நார்த்தாங்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அரவூரில் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து நடவு நட்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது, தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கின்ற வகையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உச்சவரம்பை தளர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொட்டையூரில் பிரச்சாரத்தின்போது, நன்னிலம் தொகுதி மக்களால் எம்எல்ஏவாக, உணவுத்துறை அமைச்சராக 10 ஆண்டுகளாக உங்களை சுற்றி சுற்றி வந்து உங்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

நான் உயிருக்கு போராடிய போது நலம் பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து உயிரை மீட்டு கொடுத்துள்ளீர்கள். இதற்காக நான் என்றைக்கும் உங்களிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருப்பேன். இத்தகைய அன்புமிக்க நன்னிலம் தொகுதி வாக்காளர்களை பெற்றிருப்பது இறைவன் எனக்கு கொடுத்த வரமாகவே கருதுகிறேன். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். வாக்கு சேகரிப்பின்போது பாமக மாநில துணைத்தலைவர் வேணு.பாஸ்கரன் மற்றும் அதிமுக, பாஜக, தமாகா, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Lord ,Nannilam ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்