×

சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தேர்தல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, மார்ச் 29: சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தேர்தல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெயராமன் சென்னை ரயில்வே பொது மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் தங்கி பணிபுரியும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு சென்னையில் இருந்து காரைக்குடிக்கு திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக தேர்தல் சிறப்பு ரயில் விடவேண்டும். தேர்தல் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பி செல்ல ஏதுவாக ஏப்ரல் 6ம் தேதி இரவு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு தேர்தல் சிறப்பு ரயில் விடவேண்டும்.

மேலும் தினசரி திருச்சியில் இருந்து காரைக்குடி வரை வந்து செல்லும் டெமு விரைவு ரயிலை (வண்டி எண் 06125/06126) அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள பெரிய நகரமான திருச்சிக்கு அலுவலகம் செல்வோர், மாணவர்கள், வியாபாரிகள், பொருட்கள் வாங்கச் செல்லும் பயணிகள் அதிகம் பயணம் செய்வார்கள். மேலும் காய்கறிகள், மீன், பால் ஏற்றுமதி இறக்குமதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இருமுனைகளிலிருந்தும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு தினசரி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். சரக்கு போக்குவரத்து ரயில்களையும் இயக்கிட வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிகளுக்காக காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் ரயில் போக்குவரத்து தொடங்கிய நாளிலிருந்தே டெமு ரயில்தான் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது. மேலும் இந்த வழித்தடத்தில் 72 ரயில்வே கேட்டுகள் உள்ளது. அதற்கு ரயில்வேகேட் கீப்பர்கள் இல்லாததால் 5 முதல் 7 மொபைல் ரயில்வேகேட் கீப்பர்களை வைத்து காரைக்குடி - திருவாரூருக்கு பல மணி நேரம் ரயிலை இயக்கி வந்தனர்.

அந்த ரயிலும் சில மாதங்கள் மட்டுமே ஓடின. அதன்பிறகு கொரோனா காலம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத ஒரு சூழ்நிலையே இருந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் நேரத்திலாவது ஒரு ரயிலை விடவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Tags : Chennai ,Pattukottai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...