பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரப்பெருந் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சியில் 18வது வார்டில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், பங்குனி உத்திரப்பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை ஹம்ச வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. 21ம்தேதி சிம்ம வாகனத்திலும், 22ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 23ம் தேதி ஷேச வாகனத்திலும், 24ம் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 25ம் தேதி, யானை வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 26ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு, புஷ்ப பல்லக்கில் சாமி ஊர்வலம் நடந்தது. 27ம் தேதி வெண்ணைத் தாழி நிகழ்ச்சியுடன் குதிரை வாகன சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வடம் பிடித்தல் நேற்று காலை 10.30மணியிலிருந்து 11.30மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் அனிதா முன்னிலையில், முக்கிய பிரமுகர்களான முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், ராஜேந்திரன், பூக்கடை சரவணன், கீத்துக்கடைகுமார், இராமலிங்கம் மற்றும் பெரம்பலூர், எளம்பலூர், நெடுவாசல், அரணாரை, விளாமுத்தூர் உள்ளிட்ட பலபகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாரும், அலங்காரத்தை சென்னை விக்கிரமனும், ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை (அரியலூர்) உதவி ஆணையர் கிருஷ்ணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>