×

கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடியின்றி 7,000 ஹெக்டேர் நிலம் தரிசானது

கொள்ளிடம், மார்ச் 29: கொள்ளிடம் பகுதியில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மிகவும் குறைந்து விட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாகும். இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர் பெரும்பகுதி சேதமடைந்து விட்டது. இதனால் விவசாயிகள் துயரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்யும் நேரத்திலும் பெய்து கொண்டிருந்ததால் உளுந்து விதைப்பு செய்ய முடியாமல் போனது. கொள்ளிடம் பகுதியில் வருடந்தோறும் 10,500 எக்டேர் மற்றும் அதற்கு மேலும் நிலத்தில் சம்பா நெற்பயிர் வருடந்தோறும் பயிரிடப்பட்டு வருவது வழக்கம். அறுவடை முடியும் தருவாயில் அறுவடைக்கு முன்பாகவே வயலில் உளுந்து விதைப்பதும், தரிசாக உள்ள நிலங்களிலும் ஒரே நேரத்தில் உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்வது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்தபடி உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்ய முடியவில்லை. இதனால் 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விதைப்பு செய்ய முடிந்தது. மீதமுள்ள வயல்களில் விதைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்வதால் அதிக செலவின்றி ஓரளவுக்கு லாபம் ஈட்டும் பயிராக இருந்து வருகிறது. இந்த வருடம் விதைப்பு செய்ய முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்தனர். இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் அதிகாரிகள், கோடை காலத்துக்கு ஏற்ற உளுந்து விதைகளை விதைக்க முடியும். அதன் மூலம் நல்ல மகசூலைப் பெறமுடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அப்படி விவசாயிகள் கோடை உளுந்து சாகுபடி மேற்கொண்டால் நல்ல மகசூலை பெறுவதுடன் நஷ்டத்திலிருந்து விடுபடலாம் என்றும் தெரிவித்தனர். கொள்ளிடம் பகுதியில் உளுந்து விதைப்பு செய்யாததால் சுமார் 7000 எக்டேர் நிலப்பரப்பு தரிசாகக் கிடக்கிறது.

Tags : Kollidam ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்