பங்குனி திருவிழாவையொட்டி சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாகை,மார்ச்29: பங்குனி திருவிழாவை முன்னிட்டு நாகை சவுந்தரராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம் நடந்தது.நாகையில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களுள் 19 வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடபெறும். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும், மாலையில் கருட வாகனம், யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை:

108 திவ்ய தேசங்களுள் 22வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கங்களில் 5வது அரங்கமுமான இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் திருநாள் உற்சவமான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேவி, பூதேவி தாயார்களுடன் பரிமள ரெங்கநாதர் தேரில் எழுந்தருள செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என மூழக்கமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>