×

குளித்தலையில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம்

குளித்தலை, மார்ச் 29: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் ரோட்டில் உள்ளது அய்யர்மலை கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் ஆண்டாண்டு காலமாக பங்குனி உத்திரத்தன்று அய்யர் மலையில் இருந்து உற்சவர் சாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த வருடம் கொரோனோ தாக்குதலால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. அதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த வருடம் பங்குனி உத்திரத்தன்று மீண்டும் தெப்ப உற்சவம் நடைபெற இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று வழக்கம்போல் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இவ் விழாவினை ஒட்டி அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலிலிருந்து உற்சவர் முக்கிய வீதி வழியாக வந்து தெப்பக்குளத்தை அடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மின்னொளியில் அமைந்திருந்த தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து மீண்டும் கரையை அடைந்தது. அதன் பிறகு பக்தர்கள் உற்சவரை தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்திருவிழாவையும் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை மீண்டும் உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்று முக்கிய வீதி வழியாக அய்யர் மலைக்கு உற்சவர் செல்வார்.

Tags : Uttar Boat Festival ,Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...