இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பு கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு

கோவில்பட்டி, மார்ச் 29: தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேசினார். கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து கனிமொழி எம்பி பேசியதாவது: கோவில்பட்டி தொகுதி வளர்ச்சிக்கு இங்குள்ள அமைச்சர் என்ன செய்துள்ளார். தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்தவில்லை. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக உள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று மத்தியஅரசு கூறியது. அப்போது பொதுமக்கள் கஷ்டப்பட்டனர். அதேபோல மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. சிறு குறு தொழில்கள், ஆலைகள் மூட வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள், இளைஞர்கள் வேலைஇழந்து தவிக்கின்றனர்.

 தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதற்கும், சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் கொலை செய்யப்பட்டதற்கும் தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்குங்கள். அதிமுக ஆட்சியில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும்.

மேலும் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். பால் விலை குறைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், 5 சவரன் நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும். கோவில்பட்டி அரசு மருத்துவமனை நவீனமயமாக்கபடும், தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நியாயமான முறையில் சிட்கோ மூலம் வழங்கப்படும், கோவில்பட்டி தொழிற்பேட்டை விரிவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories:

>