×

உடன்குடி, குளத்தூர் பகுதி கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்

உடன்குடி,மார்ச்.29: உடன்குடி அருகே கூழையன்குண்டு கல்லால் அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. இதையொட்டி மாலை 4மணிக்கு குலசேகரன்பட்டணம் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரையில் இருந்து கோயில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமையில் தீர்த்தம் எடுத்து வந்தனர். (28ம் தேதி) காலை 5மணிக்கு அல்லி உத்திலிருந்து தீர்த்தக்குடம் கோயிலுக்கு எடுத்துவந்தனர். காலை 6மணிக்கு மகாகணபதி ஹோமம், இடர் நீக்கும் வேள்வி, மகாலெட்சுமி யாகம் நடந்தது. காலை 7மணிக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குடம் பவனியும், தொடர்ந்து காலை 8மணிக்கு மகாகணபதி, கல்லால் அய்யனார், வைத்தியலிங்கசுவாமி, முருகபெருமாள், பத்திரகாளியம்மன், பிரம்மசக்தியம்மன், சாஸ்தா, பிள்ளை பெருமாள், முன்னடி முருகன், முத்துப்பேச்சிஅம்மன், கருப்ப சித்தர், சுடலைமாடசுவாமி, காலம்மை நாடாச்சிஅம்மன் மற்றும் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

காலை 10 மணி, இரவு 8மணிக்கு வில்லிசை, மதியம் 12மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கொரோனா நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 7 மணிக்கு சிவதாண்டவம், இரவு 10மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 12மணிக்கு சிறப்பு தீபாராதனை, சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜை நடந்தது. இதேபோல் உடன்குடி, மெஞ்ஞானபுரம், பன்னம்பாறை, பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், தேரிக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக மெஞ்ஞானபுரத்தில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குளத்தூர்: பங்குனி உத்திரத்தை யொட்டி குளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான பனையூர், பூசனூர், புளியங்குளம், வேடநத்தம், வைப்பார், சூரங்குடி பகுதியில் உள்ள அய்யனார் மற்றும் சாஸ்தா கோயில்களில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் என பல்வேறு நகர பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு செய்தனர். குளத்தூர் மேற்கு பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் நேற்று காலை கணபதிஹோமத்தையடுத்து பக்தர்கள் கோயில் முன்பு பொங்கலிட்டும் சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு கோழி, சேவல், ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல் புளியங்குளம் ஆற்று படுகையில் உள்ள அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜையையடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக கறிவிருந்து அளிக்கப்பட்டது.

Tags : Panguni Uttara festival ,Udankudi ,Kulathur ,
× RELATED வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழா