×

பேட்டையில் வீடுவீடாக பிரசாரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நெல்லை தொகுதியில் தொழில் பூங்காக்கள்

பேட்டை, மார்ச் 29:  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நெல்லை தொகுதியில் எண்ணற்ற ஏராளமான தொழில் பூங்காக்கள் அமைத்திட பாடுபடுவேன் என பேட்டையில் வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நெல்லை தொகுதியில் பாஜ வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் பேட்டையில் நேற்று 48,49வது வார்டுகளுக்கு உட்பட்ட எம்ஜிபி தெரு, சாம்பவர் தெரு, ரொட்டிக்கடை ஸ்டாப், ரகுமான்பேட்டை, ஆசிரியர் காலனி, அண்ணாநகர், செந்தமிழ்நகர், எம்ஜிஆர் நகர், சத்யாநகர், விஸ்வநாதநகர் பகுதிகளில் வீதி வீதியாகவும் வீடுவீடாகவும் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். சென்ற இடமெல்லாம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில் ‘‘ மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நல்வாழ்வு திட்டங்களும் தொகுதி மக்களுக்கு தொய்வின்றி கிடைத்திட துரித நடவடிக்கை எடுப்பேன். பேட்டை மாநகராட்சி  மருத்துவமனையில் சித்த மருத்துவத்திற்கு கூடுதல் கட்டிடம் அமைத்து தருவேன். பேட்டையை மையமாகக் கொண்டு ஆம்புலன்ஸ் சேவை இயங்கச் செய்வேன். கோடகன்கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன் முறையாக தூர்வாரி சுத்தமாக பராமரித்திட நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளால் உருக்குலைந்த அனைத்துச் சாலைகளையும் விரைவில் சீரமைப்பேன்.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பணிகரிசல்குளம்- பழைய பேட்டை இணைப்பு சாலையை தரம் உயர்த்துவேன். மத்திய அரசின் வழிகாட்டல்படி சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவி ரூ.10 லட்சத்தை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கிட பிறப்பித்த உத்தரவை தடையின்றி அனைத்துத்தரப்பினரும் பெற்று பயனடைய பாடுபடுவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நெல்லை தொகுதியில் ஏராளமான தொழில் பூங்காக்கள் அமைத்திட பாடுபடுவேன். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றிட அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜ வேட்பாளராகப் போட்டியிடும் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.

பிரசாரத்தில் அதிமுக பகுதி செயலாளர் மோகன், எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சந்திரசேகரன், வட்ட செயலாளர் அமீர், கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்து, குமார், பேச்சிமுத்து, அவைத்தலைவர் அகமது ஆதம், கணேசன், பெல்டின், புட்டு சாபுல், கோபாலகிருஷ்ணன், பாஜ நெல்லை மேற்கு மண்டல தலைவர் மாரியப்பன், செயலாளர் வேல்முருகன், கிளைத் தலைவர் பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...