×

பாளையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி ஓசன்னா பாடல் பாடியபடியே சென்றனர்

நெல்லை, மார்ச் 29: குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பாளையில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்தவ மக்கள், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இவ்வாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி  17ம் தேதி சாம்பல் புதன்கிழமையோடு தொடங்கியது. தவக்காலத்தின் கடைசி வாரமான நேற்று குருத்தோலை ஞாயிறு, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  அனுசரிக்கப்பட்டது. மனுக்குலத்தை மீட்பதற்காக அரசருக்கு உரிய மரியாதையுடன் இயேசு, ஜெருசலம் நகருக்கு அழைத்து வரப்படுவதை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், குருத்தோலையை கையில் ஏந்தியபடி ‘இயேசுவே, எங்களுக்கு உதவ வாரும்’ என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தும் ‘ஓசன்னா’ என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. இதையொட்டி பாளை புனித சவேரியார் பேராலயம் சார்பில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் கிறிஸ்தவ மக்களின் குருதோலை ஞாயிறு பவனி நடந்தது. பாளை குழந்தையேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்பவனி, பாளை யோவான் கல்லூரி, வாட்டர் டேங்க் ரோடு வழியாக மீண்டும் புனித சவேரியார் ஆலயத்தில் நிறைவடைந்தது. பவனியில் பேராலய பங்கு இறைமக்கள், குருக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராலய பங்குதந்தையர்கள் செய்திருந்தனர்.

தவக்காலத்தின் தொடர்ச்சியாக பெரிய வியாழன் வழிபாடு வரும் ஏப்.1ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. பெரிய வெள்ளிக்கான நிகழ்வுகள் வரும் ஏப்ரல் 2ம் தேதியன்றும், ஈஸ்டர் நிகழ்வுகள் ஏப்ரல் 3ம் தேதி நள்ளிரவிலும் நடக்கும். ஏப்ரல் 4ம் தேதியன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதோடு தவக்காலம் நிறைவு பெறுகிறது.

Tags : Christians ,Palai ,Bhavani Hosanna ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...