×

இந்துக்களின் ஆன்மிக சுற்றுலாவுக்கு ₹25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்: திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் பிரசாரம்

நாகர்கோவில், மார்ச் 28: இந்துக்களின் ஆன்மிக சுற்றுலாவுக்கு ₹25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தெரிவித்தார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், வடசேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் திரண்டு அவரை வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் சுரேஷ்ராஜன் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் உரிய காலங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கிராம கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்காக அரசு ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யும் என்று கூறியுள்ளார்.

அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் பகுதிநேர மற்றும் ஒப்பந்தமுறை பணியாளர்கள் அனைவரின் பணிகளும் வரன்முறைப்படுத்தப்பட்டு முழுநேர அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டு கால முறை ஊதியம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் முதலியன வழங்கப்படும். 14 ஆண்டுகளாக காத்திருக்கும் 205 பேருக்கு அர்ச்சகர் பணி நியமனம் வழங்கப்படும். அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் திருக்கோயில்களில் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரிஜெகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோயில்கள் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதற்கும், இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பயணத்திற்காக அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்கப்படும்.

இது தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நான் எனது சொந்த நிதியில் இருந்து நாகர்கோவில் நாகராஜா கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை செய்து கொடுத்துள்ளேன். அந்த அளவிற்கு இங்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் யாரேனும் சொந்த நிதியில் இருந்து கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கொடுத்துள்ளார்களா? என்பதை தெரிவிக்கலாம்.

திமுக எப்போதும் இந்துக்களுக்கும் பாதுகாப்பான இயக்கமாகவே விளங்கி வருகிறது. எதிர்கட்சிகளின் பொய் பிரசாரங்கள் படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்ட மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ், காங்கிரஸ் மாநகர தலைவர் அலெக்ஸ், மதிமுக நகர செயலாளர் ஜெரோம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அந்தோணி, முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : DMK ,Suresh Rajan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி