×

6 மையங்களில் பயிற்சி வகுப்பு தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 28: குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் என்று 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் ஆசிரியர்கள் 10,500 பேர் தேர்தல் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு இரண்டாம் கட்டமாக நேற்று நடைபெற்றது.

 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும்,  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு ராமன்புதூரில் உள்ள பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் பள்ளியிலும், குளச்சலுக்கு சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம் தொகுதியில் திருவட்டார் எக்செல் மேல்நிலை பள்ளியிலும், விளவங்கோடு தொகுதிக்கு மார்த்தாண்டம் சேக்ரட்ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் தொகுதிக்கு கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நாகர்கோவில் அல்போன்சா பள்ளி, பீட்டர் ரெமிஜியூஸ் பள்ளி, புனித சேவியர் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். மின்னணு இயந்திர செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நேற்று தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் தபால் வாக்குபதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வந்து தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதற்கு ஒரு அறையில் வாக்குசாவடி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் ஆகிய  தொகுதிகளுக்கு வாக்குசீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...