×

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை ஆதரித்து நீலகிரி எம்.பி.ராசா பிரசாரம்

கூடலூர்,மார்ச்29: நீலகிரி மாவட்டம் கூடலூரில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துனை பொது செயலாளருமான ஆ.ராசா கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கூடலூர் காந்தி சிலை அருகே நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ராசாவுக்கும், வேட்பாளருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராசா பேசியதாவது:  தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றும்.தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது தான் தற்போது தமிழக மக்களின் முடிவாக உள்ளது. மோடியுடன் கூட்டணி வைத்து மீண்டும் தமிழ்நாட்டில் ஊழல் செய்து சொத்து சேர்க்க முடிவு செய்துள்ள ஈபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.ஜெயலலிதா வழியில் அம்மா ஆட்சி என்பது தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக சீர்குலைக்கும் முயற்சியாகும்.

அதிமுக பாஜக கூட்டணி மக்கள் நலன்களுக்கு எதிரான பாஜகவின் அனைத்துக் கொள்கைகளையும் நிறைவேற்றும் அடிமை அரசாக மாறி உள்ளது.குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேலவையில் ஆதரவு தெரிவித்து சட்டம் நிறைவேற வழி வகுத்து விட்டு, தற்போது மக்களிடம் ஓட்டுக்காக குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும்  அதிமுகவின் கபட நாடகமாகும்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அப்பாவிகளாக ஜெயிலில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசு, ஜெயலலிதாவின் குற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, அதிமுகவினர் போராட்டம் நடத்தி மூன்று கல்லூரி மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்தது அதிமுக அரசு.

தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என எடப்பாடி அறிவிக்கிறார். இதே போல் மோடியும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார். இதுவரை வழங்கவில்லை. மோடியுடன் கூட்டணி வைத்தால் மோடியை போலவே தானும் மக்களை ஏமாற்றுவேன் என்பது தான் அவரது கொள்கை. தமிழ்நாட்டின் பாரம்பரியம்,கலாச்சாரம்,மொழி, அடையாளங்களை பேணிக் காக்கும் வெளிப்படையான ஆட்சியை ஸ்டாலின் தலைமையில் திமுக வழங்கும். அனைத்து தரப்பு மக்களின் நலன்களை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும், திமுக ஆட்சிக்கு வர உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் காசிலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து நெலாக்கோட்டை,பிதர்காடு,கொளப்பள்ளி,பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் காசிலிங்கம், மாவட்ட செயலாளர் முபாரக் , தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, சிவானந்தராஜா மற்றும் காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Nilgiris ,Raza ,DMK ,Kasilingam ,Kudalur ,
× RELATED நீலகிரி திமுக வேட்பாளர்...