புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

ஈரோடு, மார்ச் 29:   கொரோனா பரவல் காரணமாக ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்., 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் கடந்த பிப்., மாதம் 17ம் தேதி துவங்கி, சம்பல் புதனுடன் கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளிக்கு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு விழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.

அதன்படி, குருத்தோலை ஞாயிறு விழாவான நேற்று தேவலாயங்களில் கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு புனித அமல அன்னை தேவலாயத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குருத்தோலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, ஆலயத்திற்குள்ளேயே எளிமையாக குருத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆலயத்தின் பங்கு தந்தை ஜான் சேவியர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஏப்., 1ம் தேதி புனித வியாக்கிழமை மற்றும் ஏப்.,2ம் தேதி புனித வெள்ளியும் ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனையும், பகல் 11 மணிக்கு சிலுவைப்பாடு நிகழ்வும், ஏப்.,3ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஈஸ்டர் விழா சிறப்பு திருப்பலி துவங்க உள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடைபெற உள்ளது. எனவே, ஆலயத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என ஆலயத்தின் பங்கு தந்தை ஜான் சேவியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>